Tuesday, November 29, 2011

த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ருக்கு கோடானு கோடி ந‌ன்றிக‌ள்!

சிம்பு, ப‌ர‌த், விஷால் ந‌டித்த‌ ப‌ட‌ங்க‌ளைப் பார்ப்ப‌தைவிட‌ இப்போதைக்கு வீட்டிலிருந்து அலுவ‌ல‌க‌ம் சென்று வ‌ருவ‌துதான் மிகுந்த‌ எரிச்ச‌லைத் த‌ருகிற‌து. ந‌ம்மிடையே ம‌ழை நீர் வ‌டிகால் வ‌சதி எந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் இருக்கிற‌து என்ப‌து ஒவ்வொரு முறை ம‌ழை பெய்யும்போதும் தெளிவாக‌த் தெரிகிற‌து.

வீட்டின் அருகிலேயே பெருங்குடி ஏரி இருக்கிற‌து. அதை ஏரி என்று கூட‌ சொல்ல‌முடியாது. அந்த‌ இட‌ம் அண்ணா ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திற்கு சொந்த‌மான‌ இட‌ம். அதை ர‌யில்வே குவார்ட்ட‌ர்ஸாக‌ மாற்ற‌ப்போகிறார்க‌ள் என்றும் ஒரு பேச்சு இருந்த‌து. ஆனால் த‌ற்போதைக்கு அந்த‌ இட‌த்தைப் பார்த்தால் அது ஒரு ஏரி போல‌த்தான் காட்சிய‌ளிக்கிற‌து.

இவ்வ‌ருட‌ ஆர‌ம்ப‌த்தில் நாங்க‌ள் குடியிருக்கும் தெரு ம‌ற்றும் அக்க‌ம் ப‌க்க‌ம் இருக்கும் தெருக்க‌ளிலெல்லாம் சிமெண்ட் ரோடு போட்டார்க‌ள். எந்த‌ அழ‌கில் ரோடு போட்டிருக்கிறார்க‌ள் என்று இப்போதுதான் உறைக்கிற‌து. பெய்த‌ ம‌ழைக்கு, ரோட்டில் தேங்கும் த‌ண்ணீரெல்லாம் ஏரிக்கு போகாம‌ல், ஏரி நிறைந்து தெருவுக்குள் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிற‌து. மிகைப்ப‌டுத்திச் சொல்ல‌வில்லை, வீட்டிற்கு வெளியே தேங்கும் த‌ண்ணீரில் ந‌ட‌ந்து போனால், நிறைய‌ மீன்க‌ளையெல்லாம் காண‌முடிகிற‌து. 

டாஸ்மாக்குக்கு போகாம‌லேயே த‌ண்ணீரில் மித‌க்கும் எங்க‌ள் தெரு





இர‌ண்டு வார‌ங்க‌ளுக்கு முன் பெய்த‌ ம‌ழையின்போதே, தெருவில் த‌ண்ணீர் அதிக‌மாக‌ தேங்கியிருந்த‌து. ஃபேஸ்புக்கில் மேய‌ரின் ப்ரொஃபைலில் அவ‌ருடைய‌ தொலைபேசி எண் இருந்த‌து. கால் ப‌ண்ணிய‌போது எதிர்முனையில் ஒருவ‌ர் பேசினார். அவ‌ரின் பிஏவாக‌ இருக்க‌க்கூடும். எந்த‌ ஏரியா, தெரு என்ப‌தையெல்லாம் கேட்டுக்கொண்ட‌பிற‌கு, என் பெய‌ரையும், ந‌ம்ப‌ரையும் கேட்டு வாங்கிக்கொண்டார்.

உங்க‌ள் தெருவில் ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும்போது, உங்க‌ளுக்குத் த‌க‌வ‌ல் தெரிவிக்க‌ப்ப‌டும் என்றார். இர‌ண்டு வார‌ங்க‌ள் க‌ட‌ந்து இப்போது ம‌றுப‌டியும் ம‌ழை பெய்து அவ‌ஸ்தையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்னும் கால் வ‌ந்த‌பாடில்லை.



இத்த‌னைக்கும் அடை ம‌ழை பெய்த‌து, பேய் ம‌ழை கொட்டித் தீர்த்த‌து என்றெல்லாம் சொல்லிவிட‌ முடியாது. எவ்வ‌ள‌வு பெய்ய‌ வேண்டுமோ அந்த‌ள‌வு ஒவ்வொரு வ‌ருட‌மும் பெய்துகொண்டுதான் இருக்கிற‌து. இந்த‌ ஆண்டும் விதிவில‌க்க‌ல்ல‌. இந்த‌ள‌வு ம‌ழை இப்போது இல்லையென்றால் நாம்தான் ஏப்ர‌ல், மே மாத‌ங்க‌ளில் த‌ண்ணீருக்காக‌ க‌ஷ்ட‌ப்ப‌ட‌வேண்டியிருக்கும்.

குறை ந‌ம் சாலை வ‌ச‌திக‌ளில்தான் இருக்கிற‌து. எவ‌ரெல்லாம் இந்த‌ சாலை போடும் கான்ட்ராக்ட்டில் ல‌ஞ்ச‌ம் வாங்குகிறார்க‌ளோ, அவ‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள். த‌ய‌வுசெய்து கொஞ்ச‌ம் குறைத்து வாங்குங்க‌ள். ஈசிஆர் அள‌வுக்கு தேவையில்லை. இர‌ண்டு ம‌ணி நேர‌ ம‌ழைக்கே பிள‌ந்து கொள்ளும் சாலைக‌ளை வைத்துக்கொண்டு என்ன‌ ம‌......வாயில் கெட்ட‌ வார்த்தைதான் வ‌ருகிற‌து.

இவ்வ‌ள‌வு ம‌ழைக்கு அப்புற‌மும் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாம‌ல், ம‌க்க‌ளின் ச‌கிப்புத்த‌ன்மையை அதிக‌ரித்து எதையும் தாங்கும் வ‌லிமையை ம‌றைமுக‌மாக‌ வ‌ள‌ர்க்கும், தாயுள்ள‌ம் கொண்ட‌ த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ருக்கு கோடானு கோடி ந‌ன்றிக‌ள்!

5 comments:

  1. புகைப்படங்களே கதை முழுதையும் சொல்லி விடுகின்றன. கொடுமையா இருக்கு பார்க்க !

    மேயர் அலுவலகதுக்கெல்லாம் போன் பண்ணி முயற்சி பண்ணிருக்கீங்க சபாஷ்.

    இந்த மழை இல்லா விடில் ஏப்ரல் மே போர்வெல்கள் படுத்து விடும் என்பது உண்மை தான்

    ReplyDelete
  2. m..
    padam paakkave kashttamaayirukku.

    ini ithil thangum kosukkal,
    athilirunthu paravum noikal nu periya thodarkathaikale irukkirathai ninachaal innum kovam varuthu...

    :(

    ReplyDelete
  3. //மேயர் அலுவலகதுக்கெல்லாம் போன் பண்ணி முயற்சி பண்ணிருக்கீங்க சபாஷ்.//

    ந‌ன்றி மோக‌ன், யாராவ‌து ஸ்டெப் எடுக்க‌மாட்டார்க‌ளா என்று காத்திருப்ப‌தை விட‌, நாமே முய‌ற்சி செய்வோம்னு தோணுச்சு. ப‌ட், ஒரு பிர‌யோஜ‌ன‌மும் இல்லை :(

    ந‌ன்றி இர‌சிகை, நானாவ‌து த‌ட்டுத்த‌டுமாறி பைக்கில் சென்றுவிடுகிறேன். இந்த‌ த‌ண்ணீரில் ந‌ட‌ந்து செல்ப‌வ‌ர்க‌ளின் நிலையை நினைத்தால்தான் ரொம்ப‌ க‌ஷ்டமா இருக்கு. :(

    ReplyDelete
  4. //இர‌ண்டு ம‌ணி நேர‌ ம‌ழைக்கே பிள‌ந்து கொள்ளும் சாலைக‌ளை வைத்துக்கொண்டு என்ன‌ ம‌......வாயில் கெட்ட‌ வார்த்தைதான் வ‌ருகிற‌து.//... நோ, நோ பேட் வேர்ட்ஸ்...:-)

    ReplyDelete
  5. ந‌ன்றி ப்ரியா, இங்க இருக்க‌ற‌ சாலைக‌ளோட‌ ல‌ட்ச‌ண‌ம் அப்ப‌டி பேச‌வைக்குது :(

    ReplyDelete